கோவை, நவ. 28: கோவை அடுத்த கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா(37). அரசு பள்ளி ஆசிரியை. இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கருமத்தம்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடனுக்காக மாதாந்திர தவணை தொகையும் செலுத்தி வந்தேன். கடந்த 2021ம் ஆண்டு ஷர்மிளா சேமிப்பு கணக்கு சரியான பரிவர்த்தனை செய்யப்படவில்லை என நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வங்கி நிர்வாகத்தின் கவனக்குறைவால் எடுக்கப்படாத தவணை தொகைக்கு அபராத வட்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரணை நடத்திய நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் வங்கி நிர்வாகம் ரூ.1 லட்சம் இழப்பீடாகவும், கோர்ட்டு செலவாக ரூ.10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர். இதேபோல், பொள்ளாச்சி வெங்கடேசா காலனியை சேர்ந்தவர் கமலா. டாக்டர். இவர் கார் நிறுவனத்தில் புதிய கார் புக் செய்தார். அந்த நிறுவனத்தினர் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் டெலிவரி செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் கமலா குறிப்பிட்ட நல்ல நேரத்திற்குள் கார் டெலிவரி செய்யப்படவில்லை. 10.30 மணிக்கு டெலிவரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் காரை பெற மறுத்து கமலா திருப்பி அனுப்பி விட்டார்.
அதன்பிறகு மற்றொரு நாளில் காரை பெற்று கொண்டார். ஆனால் அந்த காருக்கு சீட் பெல்ட் சரிவர செயல்பட வில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கமலா நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கோவை நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். கார் நிறுவனம் சார்பில் மனுதாரர் வீடு 50 கி.மீ தூரம் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய முடியவில்லை என தெரிவித்திருந்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக கார் நிறுவனம் ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

