கோவை, டிச.11: கோவை பட்டுக்கூடு அங்காடி மையத்தில் நடந்த ஏலத்தில் பட்டுக்கூடுகள் கிலோ ரூ.795 வரை ஏலம் போனாதல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. இங்கு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 12 மணியளவில் வெண்பட்டுக்கூடுகள் ஏலம் நடைபெறும்.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, உடுமலை, திண்டுக்கல், கோபி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் பட்டுக்கூடு தினசரி ஏலமிடப்பட்டு, நூற்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு டன் அளவிற்கு பட்டுக்கூடுகள் கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது. தவிர, தரமான பட்டுக்கூடுகளும் வரவில்லை. இதனால், கடந்த வாரம் பட்டுக்கூடுகள் சராசரியாக கிலோ ரூ.700-க்கு ஏலம் போனது. இந்நிலையில், கோவை பட்டுக்கூடு அங்காடிக்கு தரமான பட்டுக்கூடுகள் கோவை, ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்பட்டது.
இதில், ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.795-க்கும், குறைந்த பட்சமாக ரூ.580-க்கும் ஏலம் போனது.
மேலும், நேற்று நடந்த ஏலத்தில் 8 விவசாயிகள் பங்கேற்று மொத்தம் 567 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். அந்த பட்டுக்கூடுகள் 4 லட்சத்து 14 ஆயிரத்துக்கு 362 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் சராசரி விலை கிலோ ரூ.730-ஆக இருந்தது.


