ஜெயங்கொண்டம், ஜூலை 14: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் தலைமையிடமாக வைத்து கங்கை முதல் கடாரம் (மலேசியா) வரை ஆட்சி புரிந்ததன் நினைவாக கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அதாவது மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி மாத திருவாதிரை நட்சத்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இது அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆடிதிருவாதிரையை முன்னிட்டு கோயில் வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்கள், உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் உள்ள தொல்லியல் துறை மூலம் புல் வெட்டுதல் தரையை சமன்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வருடம் பாரத பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெளிப்பிரகாரத்தில் தென்புறம் உள்ள தரை சமன்படுத்தப்பட்டும் தூய்மைப்படுத்தப்பட்டும் வருகின்றன.பெரிய கோபுரம் அருகில் உள்ள விநாயகர் கோவில் கோபுரம் பெரிய நந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தூய்மைப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.