Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.80 கோடி மதிப்பீட்டில் வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு

சென்னை: வள்ளுவர் கோட்டம் புனரமைப்புப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று நேரில் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி 2023-24ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர், உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் புகழினை உலகெங்கிலும் கொண்டு செல்ல வள்ளுவர் கோட்ம் 1976ம் ஆண்டு திறக்கப்பட்டது.

கலையழகும், கம்பீரமும் கொண்டு சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்புப் பணிகள் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில் மேற்கொள்ளப்படும், என அறிவித்தார். கலைஞரால், வள்ளுவர் கோட்டம், வடிவமைக்கப்பட்டு 1974ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டபின், 1976ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கலை நுணுக்கத்தோடு ஆசியாவிலேயே மிகப்பெரியதாக, நடுவில் தூணே இல்லாத அரங்கத்துடன், திருவாரூர் தேரையே சென்னை மாநகருக்குக் கொண்டு வந்ததுபோல் சிற்பத்தேர் உருவாக்கப்பட்டு அதனை வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் நிர்மாணித்துக் காண்போரைக் கவரும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.

திருவள்ளுவரின் புகழ்போற்றும் இந்த மாபெரும் கலைச் சின்னமாகிய வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கத்தையும், பூங்காவையும், பராமரிக்கவும், தேர், கோபுரம், கலசம், திருவள்ளுவர் சிலை ஆகியவைகளின் நிழல் உருவம் தெரியும் வண்ணம் அமையப் பெற்றிருக்கும் நீர் நிலைகளைப் பராமரிக்கவும், கோட்டம் ஒளிமிக்கதாக என்றென்றும் திகழவும், பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தவும் வள்ளுவர் கோட்டத்தினைக் காலச் சூழலுக்கு ஏற்றவாறும், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடனும் கலையம்சம் மாறாமல் புனரமைத்திடவும் ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2023ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த அரசாணைப்படி வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்புப் பணிகள், புதிய கட்டுமானப் பணிகள், கூடுதல் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுடன் நடைபெற்றுவரும் புனரமைப்புப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயகர் முன்னிலையில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது செய்தித்துறை கூடுதல் இயக்குநர் செல்வராஜ், இணை இயக்குநர் தமிழ்செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.