Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்டையார்பேட்டை மண்டலத்தில் பருவமழை அவசர ஆலோசனை கூட்டம்: பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி பங்கேற்பு

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் மழைக்கால அவசர ஆலோசனை கூட்டம், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கண்காணிப்பாளர் கண்ணன், வடக்கு மண்டல துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் கலந்துகொண்டு மழைக்கு முன்பு செய்யக்கூடிய பணிகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறை, மின்வாரியத்துறை, குடிநீர் வாரியம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தால் தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்கே நகர், பெரம்பூர் ஆகிய வார்டுகளில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து தற்போது 68 இடங்களில் தண்ணீர் நிற்கிறது. அந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்ற மோட்டார்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் கால்வாய், ஜவகர் கெனால், பக்கிங்காம் கால்வாய், உள்ளிட்டவை தூர்வாரப்பட்டு வருகிறது. இன்னும் பணிகள் முடியாமல் இருந்தால் விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும் மழை பாதிப்பின் போது பாதிக்கப்படுபவர்கள் தாழ்வான பகுதியில் இருந்து மீட்கப்பட்டு அவர்கள் தங்குவதற்கு இடங்கள் தயார் நிலையில் வைக்கவும் சுகாதாரத்துறை சார்பில் மழையின் போது காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் மக்களுக்கு மருந்து மாத்திரைகள், மருத்துவ குழு ஆகியவை தயார் நிலையில் வைப்பது, மின்சார வாரியத்தின் தாழ்வான மின் பெட்டிகளை உயர்த்தி வைப்பது, கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் ஆகியவற்றில் உள்ள அடைப்புகளை அகற்றுவது, தூர் வாருவது, மாநகராட்சி அனுமதி இல்லாமல் மின்வாரியம், குடிநீர் வாரியம் ஆகியவை சாலையில் பள்ளம் தோண்ட அனுமதி இல்லை.

பழுதடைந்த சாலைகளில் தற்காலிக சாலை அமைப்பது, பருவ மழையில் பாதிப்பு ஏற்பட்டால் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு சமைக்கும் கூடங்கள், அவர்களுக்கு உடனே வழங்க பால், பிரட், போர்வை ஆகியவை தயார் நிலையில் வைப்பது, மழையின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கி, உதவிகள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் மண்டல அதிகாரி சரவண மூர்த்தி, பகுதி செயற்பொறியாளர்கள் திருநாவுக்கரசு, ஹரிநாத், குடிநீர் வாரிய செயற்பொறியாளர் உமாசங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.