Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பிடிபட்ட 306 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை: பொது சுகாதாரத்துறை நடவடிக்கை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பிடிபட்ட 306 தெரு நாய்களுக்கு, பொதுசுகாதாரத்துறை சார்பில் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரப்பெற்றதன் அடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களைப் பிடித்து, இந்திய விலங்குகள் நலவாரியம் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இனக்கட்டுப்பாடு செய்யும் பணி மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், நாய்கள் பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் அனகாபுத்தூர், பாரதிபுரம் மற்றும் குண்டுமேடு ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இந்திய விலங்குகள் நலவாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர்களால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 1.5.2024 முதல் 11.6.2024 வரை 320 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, 306 தெருநாய்களுக்கு நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தில் கால்நடை மருத்துவக் குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து 5 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசியும் போடப்பட்டு, பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது.