பார்க்கிங் பகுதியை டெண்டர் விடாமல் உள்ளதால் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் அடிக்கடி இருசக்கர வாகனம் திருட்டு
சென்னை: வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதியை டெண்டர் விடாமல் உள்ளதால் அடிக்கடி பைக்குகள் திருட்டு நடக்கிறது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், முல்லை நகர், சர்மா நகர், புளியந்தோப்பு, கணேசபுரம் உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் தினமும் புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில் மூலம் சென்று வருகின்றனர். இதற்காக ஜீவா ரயில் நிலையம் சென்று அங்கிருந்து சென்னை கடற்கரை சந்திப்பு மார்க்கமாக கிண்டி, தாம்பரம், மறைமலைநகர், செங்கல்பட்டு மற்றும் ஆவடி, செவ்வாய்பேட்டை, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள், காலையில் தங்களது பைக்கில், ஜீவா ரயில் நிலையம் வந்து, அங்குள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு செல்வார்கள். மாலையில் திரும்பும்போது, தங்களது வாகனங்களை எடுத்து செல்வது வழக்கம். ஆனால், இந்த பார்க்கிங் பகுதி டெண்டர் விடாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இங்கு பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்படும் பைக்குகள் அடிக்கடி திருடுபோகின்றன. குறிப்பாக, விலை உயர்ந்த பைக்குகளை மர்மநபர்கள் திருடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாசர்பாடி, 3வது பள்ளத்தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன், கடந்த 14ம் தேதி வழக்கம்போல் ஜீவா ரயில் நிலையத்தில், தனது பைக்கை நிறுத்திவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். மாலையில் திரும்பி வந்தபோது, அவரது பைக்கை காணாமல் திடுக்கிட்டார். இதுகுறித்து ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘நடுத்தர மக்கள், கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கும், வியாபாரத்துக்கும் புறநகர் பகுதிக்கு செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அதையும் சிறுக சிறுக குருவிபோல ஒரு தொகையை சேமித்து, அதை பைனான்ஸ் கம்பெனியில் கொடுத்து, தவணை முறையில் இரு சக்கர வாகனம் வாங்குகிறார்கள். வடசென்னையில் கல்லூரி, வேலை, வியாபாரம் என செல்பவர்கள், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் பைக்குகளை நிறுத்துகின்றனர். ஆனால் அந்த பார்க்கிங் பகுதி டெண்டர் விடாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி, மர்மநபர்கள் வாகனங்களை திருடி செல்கின்றனர். அதிலும் விலை உயர்ந்த, புதிய வாகனங்களை குறி வைத்து திருடுவது வேதனையாக உள்ளது. எனவே, பார்க்கிங் பகுதிக்கு டெண்டர் விட வழிவகை செய்ய வேண்டும்,’’ என்றனர்.