Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்கள், காவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு: தேர்தல் அலுவலர் முன்னிலையில் நடந்தது

சென்னை, ஏப்.10: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள காவல் பணியாளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோரை வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், நேற்று ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்களின் முன்னிலையில் காவல்துறை பணியாளர்களை சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி முதற்கட்டமாக நடைபெற்றது. இதேபோல், பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்களின் நேரடி கண்காணிப்பில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. நுண் பார்வையாளர்கள் 923 நபர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். காவல் பணிகளில் 5 வாக்குச்சாவடிகள் உள்ள மையத்திற்கு ஒரு காவலர், 5க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள மையத்திற்கு 2 காவலர்கள் என மொத்தம் 9,277 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்குச்சாவடி பணியாளர்களில் 20% முன்னிருப்பு உட்பட 19,419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19,097 பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. 19,419 பேரில் 372 பேர் மட்டுமே உடல் நலக்குறைவு மற்ற பிற காரணங்களால் தேர்தல் பணிகளுக்கு வரவில்லை. சென்னை மாவட்டத்தில் 611 பதற்றமான வாக்குச்சாவடிகள், 23 சவாலான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் 10 வாக்குச்சாவடிகளுக்கு மேலுள்ள 135 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 769 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கான நுண் பார்வையாளர்கள் 963 நபர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பூத் சிலிப் இதுநாள் வரை 11,56,524 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களில் கடந்த 8ம் தேதி வரை 82 பேர் தங்கள் இல்லங்களில் வாக்களித்துள்ளனர். 67 வாக்குப்பதிவு குழுக்கள் மூலம் வீடுவீடாக சென்று வாக்குப்பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது திடீரென வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்தால் 10 வாக்குச்சாவடிகளுக்கு 1 துறை அதிகாரி என 269 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளை சுற்றி வரும் அவர்களிடம் உள்ள மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்குப்பதிவு தினத்தில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பிறந்த இடங்களில் வாக்கு இருப்பின் தேர்தல் தினத்தன்று செல்லாமல், 2, 3 தினங்களுக்கு முன்னதாகவே பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சி. சரட்கர், தேர்தல் பொது பார்வையாளர்கள் சுரேஷ், கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் காவல் பார்வையாளர்கள் உதய் பாஸ்கர் பில்லா, சஞ்சய் பாட்டியா, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, லலிதா, ஜெய சந்திர பானு ரெட்டி, சமீரன், ஷரண்யா அறி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.