Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2 கோடி பயனாளிகளை விரைவில் சென்றடையும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரைவில் 2 கோடி பயனாளிகளை சென்றடையும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை நேரு நகரில் பயனாளிகளின் இல்லத்திற்கே அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்று மருந்து பெட்டகம் வழங்கி, இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகிலேயே முதன்முறையாக மக்களைத் தேடி மருத்துவம் என்கிற ஒரு மகத்தான சீர்மிகு திட்டத்தை கிருஷ்ணகிரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,86,13,872 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 10,969 சுகாதார தன்னார்வலர்கள், 463 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், 463 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 2892 செவிலியர்கள் இத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம் தற்போது 3 ஆண்டுகளை முழுமையாக கடந்து 4ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது, மிக விரைவில் 2 கோடி பயனாளிகள் என்ற இலக்கை அடைய உள்ளது. நகர்ப்புறங்களில் குறிப்பாக சென்னையை பொறுத்தவரை இந்த திட்டத்தை கொண்டு செல்வது சவாலான விஷயம்.

ஆனால் பொது சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டு, தகுதி படைத்த மக்கள் தொகை (Eligibility Population) 58,94,860 என்று கண்டறியப்பட்டு, இதுவரை 53,05,373 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் ரத்த அழுத்த நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 6,03,250 பேர், நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தவர்கள் 3,65,679 பேர், இரண்டும் சேர்ந்து இருந்தவர்கள் 3,03,203 பேர், இயன்முறை சிகிச்சை தேவைப்பட்டவர்கள் 14,066 பேர், நோய் ஆதரவு சிகிச்சை 8,038, டயாலிசிஸ் பைகள் வழங்கப்பட்டவர்கள் 77 பேர் பயனடைந்துள்ளனர்.