Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வீட்டை வழக்கறிஞரிடம் இருந்து மீட்க வேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போலியான ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும், வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாதவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நந்தனம் பகுதியில் உள்ள தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில், அமர்நாத் என்ற வழக்கறிஞர் வீடு குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து குடியிருந்து வந்தார்.

இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிந்த பின், வீட்டை காலி செய்து கொடுக்காமல் மற்ற வீடுகளையும் அபகரித்து வாடகை எதுவும் கொடுக்காமல் இருந்து வந்தார். இது தொடர்பாக பார் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கறிஞர் அமர்நாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வீடு குத்தகைகான ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்துமாறு சைதாப்பேட்டை உதவி ஆணையருக்கும், தடய அறிவியல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, ஒப்பந்த காலம் முடிவடைந்த பின் வாடகை ஏதும் கொடுக்காமல் மாதவனின் வீட்டை வழக்கறிஞர் அமர்நாத் அபகரித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அதே போல், வழக்கறிஞர் அமர்நாத் நீதிமன்றத்தில் வழங்கிய வீடு குத்தகை எடுத்ததற்கான ஆவணம், அதில் இருந்த கையெழுத்து என அனைத்தும் போலியானது என்று தெரிய வந்துள்ளதாக தடய அறிவியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கறிஞர் அமர்நாத் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சிலும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீட்டை 48 மணி நேரத்தில் அமர்நாத்திடம் இருந்து மீட்டு வீட்டின் உரிமையாளர் மாதவன் வசம் காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.