Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரிடியம் தொழிலில் மும்மடங்கு லாபம் எனக்கூறி வெள்ளி பட்டறை உரிமையாளரிடம் ரூ.92 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஆலந்தூர், ஜூலை 31: மடிப்பாக்கம் ஆர்.ஆர்.நகர் பகுதியில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி(52). இவர் சூளையில் வெள்ளி பாத்திரங்கள் தயார் செய்யும் பட்டறையை நடத்தி வருகிறார். இவருக்கு அறிமுகமான ராஜாராம் என்பவர் மூலம் மும்பையைச் சேர்ந்த பீர்முகமது பாதுஷா(47) என்பவர் இரிடியம் தொழில் செய்து வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் மும்மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய தட்சிணாமூர்த்தி கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளாக ரூ.92 லட்சம் வரை பீர்முகமது பாதுஷாவிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கூறியது போல் மும்மடங்கு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்காத காரணத்தினால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தட்சிணாமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு பீர்முகமது பாதுஷாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரோ கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து தட்சிணாமூர்த்தி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன் மோசடி பிரிவில் வழக்குப்பதிந்து மும்பை தானே பகுதியில் தங்கியிருந்த பீர்முகமது பாதுஷாவை(47) நேற்று கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அதில், இரிடியத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை டிரஸ்ட் மூலமாக வழங்குவது போல் தட்சிணாமூர்த்தி குடும்பத்தினரை மும்பைக்கு வரவழைத்து அவர்களுக்கு அவார்டு ஷீல்டு போன்றவை கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளனர். ரூ.5 கோடி வங்கி கணக்கில் வரவு ஆகும் என்று ஆசை வார்த்தை கூறி, அதற்காக ஆர்.பி.ஐ. ஒப்புதல் வாங்க வேண்டும். தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று பல்வேறு காரணங்களை கூறி பல்வேறு தவணைகளில் ரூ.92 லட்சம் வரை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் பணம் மோசடியில் ஈடுபட்ட பீர்முகமது பாதுஷாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.