Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிண்டியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய போக்குவரத்து முனையம்: 3.43 ஏக்கரில் அமைகிறது

சென்னை, ஜூலை 30: கிண்டியில் ரூ.400 கோடியில், 3.43 ஏக்கரில் புதிய போக்குவரத்து முனையம் அமைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் மைய பகுதியாக கிண்டி அமைந்துள்ளது. தாம்பரம் - தி.நகர், கோயம்பேடு - புதுச்சேரி, தாம்பரம் - பிராட்வே, அம்பத்தூர் - வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பேருந்து வழித்தடத்தடங்களுக்கும், கடற்கரை - தாம்பரம் ரயில் தடத்திற்கும் கிண்டி முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. மேலும், ரயில், பேருந்து, மெட்ரோ ரயில்கள் இணையும் முக்கிய பகுதியாக கிண்டி உள்ளது. கிண்டி பகுதியில் ஏராளமான தொழில் நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அலுவலகங்கள் உள்ளன.

இங்கு பணிபுரிவதற்காக வரும் ஏராளமான பொதுமக்கள் மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து நிலையங்களை தினசரி பயன்படுத்துகின்றனர். இதனால், தினம்தோறும் சுமார் 1 லட்சம் பேர் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், கிண்டி ரயில் நிலையத்தை ரூ.13.50 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பயணிகளுக்கு வசதியாக புதிய டிக்கெட் பதிவு அலுவலகம், ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாக நடைமேடைகள் மேம்படுத்தப்படுகிறது. மேலும், ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் பழைய மேற்கூரைகளை அகற்றி, புதிய மேற்கூரைகள் அமைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் எளிதாக வந்து செல்லும் விதமாக, 3 மின்தூக்கிகள் அமைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, ரயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிண்டி ஜிஎஸ்டி சாலை பகுதியில் உள்ள சுரங்கப் பாதை அருகே சுமார் ரூ.400 கோடியில் 3.43 ஏக்கரில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள கிண்டி பேருந்து நிலையத்தை பல் நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றி வணிக வளாகம், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வாகன நிறுத்தும் இடங்கள், ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் பிரம்மாண்ட நடைமேம்பாலம், வெளிப்புற நடைபாதைகள், எஸ்கலேட்டர்கள், இணைப்பு வாகன வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகளுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் இந்த பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட உள்ளது. இதை தொடர்ந்து, ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கிண்டி ஜிஎஸ்டி சாலையை ஒட்​டி​யுள்ள சுரங்​கப்​பாதை அரு​கில் பெரிய பேருந்து முனை​யம் அமைக்​கப்பட உள்ளது. பிராட்​வே​யில் அமைவது போல், நவீன பேருந்து முனை​யம், வணிக வளாகம், வாகன நிறுத்​து​மிடங்​கள், பொழுது போக்கு அம்சங்களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மின்சார ரயில், மெட்ரோ ரயில்​, பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில்இந்த திட்டம் செயல்படுத்தப்படும். எனவே, தற்​போதுள்ள கிண்டி பேருந்து நிலை​யத்தை பல்​நோக்கு ஒருங்கிணைந்த போக்​கு​வரத்து வளாக​மாக மாற்ற இருக்​கிறோம்,’’ என்றனர்.

கூடுதல் பேருந்து சேவை

கிண்​டியை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து முனைய​மாக மாற்றினால், தற்​போது உள்​ளதைக் காட்​டிலும் கிளாம்​பாக்​கம், பிராட்​வே, கோயம்​பேடு, திரு​வான்​மியூர், அண்​ணாசதுக்​கம் உள்ளிட்ட இடங்​களுக்கு கூடு​தல் பேருந்​துகள் இயக்​கப்​படும். அது​போல கிழக்கு கடற்​கரை வழி​யாக செல்​லும் வெளியூர் பேருந்துகளை அதி​கரிக்​கலாம்.