Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மாநகர பகுதிகளில் காற்று மாசு கண்டறிய 75 அதிநவீன சென்சார்: டிஜிட்டல் திரை மூலம் நேரலை

சென்னை, ஆக.1: சென்னையில் காற்று மாசு கண்டறிய 75 அதிநவீன சுற்றுச்சூழல் சென்சார்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. காற்று மாசு என்பது ஒரு உலகளாவிய பொது சுகாதார பிரச்னையாக உள்ளது. காற்று மாசுவால் இறப்பு, சுவாசம் மற்றும் இருதய நோய்கள், நரம்பியல் பாதிப்பு குறைபாடுகள் உட்பட பல விதமான ஆரோக்கியத்துக்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வடசென்னையில் அனல் மின் நிலையம், 10 மில்லியன் டன் உற்பத்தி திறன்கொண்ட பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் மற்றும் எண்ணூர், மணலி போன்ற இடங்களில் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, திருவொற்றியூர், மணலி பகுதியில் இயங்கிவரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சென்னை உரத் தொழிற்சாலை ஆகிய ஆலைகளில் இருந்து வாயு கழிவுகள், எண்ணெய்க் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாகவே, அப்பகுதிகளில், காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, எண்ணூர், மணலி போன்ற தொழிற்சாலைப் பகுதிகளில் உள்ள காற்றில் நிக்கல், பாஸ்பரஸ், மக்னீசியம், லெட் உள்ளிட்ட ரசாயனம் மற்றும் உலோக கழிவுத் துகள்கள், நுண்துகள்களாக காற்றில் பறக்கும் போது பொதுமக்கள் சுவாசிக்கின்றனர். இதனால், மயக்கம், வாந்தி, தலைவலி, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை பொதுமக்கள் சந்திக்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொழிற்சாலைகள் விதிமீறி செயல்படுவதே காற்று மாசு அதிகரிக்க காரணமாகும். எனவே, சென்னையில் மாசு கட்டுப்பாட்டின் வாரியத்தின் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதிய கட்டுமானம், சாலை, வடிகால், பாதாள சாக்கடை, மின் புதைவடம் போன்ற பணிகள் காரணமாக பெரும்பாலான சாலைகள் புழுதிக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியானது நகரம் முழுவதும் சுற்றுச்சூழல் தரத்தை நேரடி கண்காணிப்பதற்காக 75 புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான சுற்றுச்சூழல் சென்சார்கள் அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. சென்னையில் ஏற்கனவே, 15 சென்சார்கள் உள்ள நிலையில், புதிய சென்சார்கள் நகரின் 15 மண்டலங்களிலும் முக்கிய இடங்களில் இந்த சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த சென்சார்கள் காற்றில் உள்ள தூசுகள் (பி.எம்.2.5, பி.எம்.10), மிகவும் நாசகர வாயுக்கள் (என்.ஓ.2, எஸ்.ஓ.2, சி.ஓ., ஓ.3) மட்டுமல்லாமல், காற்றின் வேகம், திசை, மழை அளவு, காற்றழுத்தம் உள்ளிட்ட பல தகவல்களை கண்காணிக்கும்.

சென்னையின் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், ஒவ்வொரு 4 சதுர கிலோ மீட்டருக்கும் ஒன்று என்ற அடிப்படையில் சென்சார்கள் அமைக்கப்படும். இப்படியாக, நகரை 100 பகுதிகளாக பிரித்து அதில் முதற்கட்டமாக 75 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய சென்சார்கள் பழைய சென்சார்களை விட அதிகம் பாராமேட்டர்களை கண்காணிக்கும். அதாவது காற்றின் வேகம், திசை, மழை அளவு, காற்றழுத்தம் போன்றவை கூட கண்காணிக்கப்படும். இந்த தகவல்கள் கட்டுப்பாட்டு மையத்தில் நேரலை கண்காணிப்புக்காக இணைக்கப்படும். இதனால் உடனடி சூழல் தரம் தகவல்கள் பெற முடியும்.

மக்கள் நலனுக்காக முக்கிய இடங்களில் பொது டிஜிட்டல் திரைகள் மூலம் உள்ளூர் காற்றுத் தூய்மை நிலை நேரலை காட்டப்படும். இந்த திட்டத்தின் மூலம் மாசுக்கட்டுப்பாடு, சூழலை எதிர்கொள்ளும் திட்டம், சிக்னல் பகுதியில் புகை, புகை களையறிதல் போன்றவற்றில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவும். இந்த புதிய முயற்சிக்கான செலவு ரூ.6.36 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் முழுமையாக செயல்படும்போது, மக்கள் சுகாதாரத்தை பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை மாசில்லாமல் பாதுகாப்பதும் சாத்தியமாகும். இத்திட்டம் மூலம் பொதுமக்கள் நேரடி சூழல் தரத்தை அறிந்து, சீரான காற்றை சுவாசிப்பதற்கான விழிப்பு நுண்ணறிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.