Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெரு மின்கம்பங்கள் மூலம் வருமானம்: மாநகராட்சி திட்டம்

சென்னை, ஜூலை 29: தெரு மின்கம்பங்கள் மூலம் வருமானம் ஈட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தெரு மின்கம்பங்களிலும், பேருந்து வழித்தடங்களில் உள்ள சென்டர் மீடியன்களில் விளம்பரங்கள் செய்ய, தனியாருக்கு அனுமதி வழங்கி, 3 ஆண்டுகளில் ரூ.94.6 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, 6 ஆண்டு கால பொதுத் தனியார் கூட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, சென்னையில் பேருந்து வழித்தடங்களில் உள்ள தெரு மின்கம்பங்கள் மற்றும் சென்டர் மீடியன்களில் விளம்பரங்கள் வைக்க உரிமை வழங்கப்படும். சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 17,000க்கும் மேற்பட்ட சென்டர் மீடியன்களும் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தை 2024 பிப்ரவரி 22ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பொதுவாக, சென்னையில் வெளிப்புற விளம்பரங்களுக்கு (பேனர்கள், போர்டுகள் போன்றவை) குறைவான பணமே ஒதுக்கப்படுகிறது. இப்போது புதிய விளம்பர இடங்களை அறிமுகப்படுத்த, முதலில் ஒரு சோதனைத் திட்டம் (பைலட்) மூலம் பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னையை நான்கு பகுதிகளாக (பேக்கேஜ்கள்) பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ளது என்பதை வைத்து விளம்பர இடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இடங்களில் அதிக விளம்பரங்கள் வரலாம் என மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதலில், பகுதி 3-ஐ சோதனை திட்டமாக மூன்று மாதங்கள் நடத்தி, பிறகு மற்ற பகுதிகளுக்கு டெண்டர் விட முடிவு செய்துள்ளது. விளம்பரங்களின் அளவு 0.6 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023-ன்படி, ஒரு சதுர மீட்டருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கட்டணமும், ஒரு விளம்பரத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.2,000 விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிபந்தனை விதித்துள்ளது. இந்த திட்டம் சென்னையில் விளம்பரங்களை அதிகரிப்பதோடு, மாநகராட்சிக்கு நல்ல வருமானத்தையும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.