சென்னை: நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐஜிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நெய்வேலியை சேர்ந்த கலா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், என் மகன் கடந்த ஏப்ரல் 10ம் தேதி தாம்பரத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, தாம்பரம் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார். காதல் என்ற பெயரில் என் மகனை பல வழிகளில் பெண் ஒருவர் கொடுமை செய்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அவர் காதலித்த பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
ஆனால், தற்கொலை செய்யும்போது கடிதம் எழுதி வைக்காததால், செல்போன் ஆதாரங்களை எடுத்துக்கொள்ள முடியாது என்று போலீசார் கூறினர். எனவே, எலக்ட்ரானிக் வடிவலான ஆதாரங்களை திரட்டி வழக்கை விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினமே வழக்கில் முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று தாம்பரம் நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
எனவே, உயர் நீதிமன்றத்திற்கு தவறான தகவலை தந்த இன்ஸ்பெக்டரின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.விஜயகுமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறிய அதே நாளில் வழக்கை முடித்து வைத்து அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்ததுள்ளார். இதை ஏற்க முடியாது. எனவே, வழக்கை முடித்து வைத்து இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் மீது ஐ.ஜி., சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் மகன் தற்கொலை வழக்கை வேறு ஒரு இன்ஸ்பெக்டரை நியமித்து விசாரித்து 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.