பூந்தமல்லி: வெளி மாநிலங்களில் இருந்து பூந்தமல்லி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், சபரிநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது பூந்தமல்லி, அரசு மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படி சென்ற காரை மடக்கி சோதனை செய்தபோது காரில் இருந்தவர்கள் இறங்கி நாலா புறமும் ஓட ஆரம்பித்தனர். அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தபோது காரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் (25), சரவணன் சிங் (23), கோதா சிங் (26), ராமாராம் (21) ஆகியோர் என்பதும் இவர்கள் பெங்களூரில் இருந்து காரில் குட்காவை காரில் கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 200 கிலோ குட்கா மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.