சென்னை, அக்.31: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், உபரிநீர் திறப்பு 2000 கன அடியில் இருந்து 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதையொட்டி, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தண்ணீர் இருப்பு 2541 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1960 கன அடி மழைநீர் வந்து கொண்டுள்ளது.
ஏரியில் இருந்து சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் மூலமாக 600 கன அடியும், பேபி கால்வாய் வழியாக 47 கன அடியும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், உபரி நீர் வெளியேற்றம் வினாடிக்கு 2000 கன அடியில் இருந்து 1000 கன அடியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2955 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 220 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2757 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 250 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி விதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
 சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 811 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 302 கன அடியாக உள்ளது.
 கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 443 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 90 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் 80 சதவீதத்திற்கும் மேல் நீர் இருப்பு உள்ளதாக, கொசஸ்தலை ஆறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
  
  
  
   
