ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து டாக்டர் மனைவி உடல் கருகி பலி: குளியல் அறைக்குள் புகுந்ததால் கணவர், மகன், மகள் தப்பினர்
சென்னை, அக்.31: ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் டாக்டர் மனைவி உடல் கருகி இறந்தார். குளியல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதால் டாக்டர், அவரது மகன், மகள் ஆகியோர் உயிர் தப்பினர். ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணா நகர், 2வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்த பிரதாப் (64). இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சசிபாலா (58). தம்பதிக்கு பூஜா ஆனந்த் (24) என்ற மகளும், ரோகித் ஆனந்த் (23) என்ற மகனும் உள்ளனர். இதில், மகள் டாக்டராகவும், மகன் இன்ஜினியராகவும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிதுநேரம் பேசிவிட்டு பின்னர் அவர்களது அறைகளுக்கு தூங்க சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டுக்குள் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்ததால் 4 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்து, வேகமாக வெளியே வர முயன்றுள்ளனர். அதற்குள் மின் வயர்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த டாக்டர் ஆனந்த் பிரதாப் உடனடியாக அனைவரையும் குளியலறைக்கு இழுத்துச்சென்று கதவை பூட்டிக்கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டுள்ளார்.
அப்போது சசிபாலா யாரையேனும் உதவிக்கு அழைக்க, தனது செல்போனை எடுக்க குளியல் அறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு படர்ந்திருந்த தீயில் சிக்கி அலறி கூச்சலிட்டுள்ளார். தங்களது கண்முன்னே உடல் முழுவதும் தீ பரவி உடல்வெந்து கதறிய நிலையில் அவரை காப்பாற்ற முடியாமல் குடும்பத்தினர் கதறியுள்ளனர். இதனிடையே டாக்டர் வீட்டில் இருந்து புகை வெளியேறுவதை பார்த்து அக்கம்பக்கத்து வீட்டினர் திரண்டு வந்து, ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கதவை திறக்க முயன்றனர். ஆனால், உள்பக்கமாக தாழிட்டு இருந்தது.
பின்னர் ஏணி மூலம் ஏறிச்சென்று குளியல் அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற வீரர்கள், அங்கு மயங்கி கிடந்த டாக்டர், அவரது மகன், மகள் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டுவந்து உடனடியாக சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே, தீயை முழுவதுமாக அணைத்து பக்கவாட்டு ஜன்னலை உடைத்து இறந்து கிடந்த சசிபாலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.இந்த தீ விபத்து குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், மின் கசிவு காரணமாக வீட்டில் உள்ள மின்வயர்கள் தீப்பிடித்து எரிந்ததும், இதன் காரணமாக குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசியில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து வீடுமுழுவதும் தீப்பிடித்து, புகைமூட்டமாக மாறியதும் தெரியவந்தது.இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்சம் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் பலியான சசிபாலா கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக நிர்வாகியுமான சி.எச்.சேகரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
 
  
  
  
   
