வேளச்சேரி, ஆக.30: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய 53ம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. இந்த ஆண்டின் மையக் கருத்தாக யூபிலி ஆண்டின் நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை கொடியேற்று விழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக காலை 5.30 மணி, 6.30 மணி, 11 மணி அளவில் தமிழில் திருப்பலியும் மற்றும் காலை 7.30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும் நடந்தது. இதையடுத்து மாலை 4.45 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா கொடி மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஆலய வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எலியட்ஸ் பீச் சாலை மற்றும் பெசன்ட் நகர் முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
இதையடுத்து சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர், புனித ஆரோக்கிய மாதா மற்றும் குழந்தை ஏசு திருவுருவம் பொறிக்கப்பட்ட 12 அடி நீள கொடியை 75 அடி உயர வெண்கல கம்பத்தில் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்தார். அப்போது ஆலய மணிகள் ஒலிக்க கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மரியே வாழ்க, பெசன்ட் நகர் ஆரோக்கிய தாயே வாழ்க என கோஷம் எழுப்பினர். புறாக்கள், பலூன்கள் மற்றும் பலூன்களால் ஆன ஜெபமாலைகள் பறக்க விடப்பட்டன. இதையடுத்து சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.
கொடியேற்ற நிகழ்சியில் கலந்துகொள்ள காலையிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாகவும், அரசு பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் லட்சக்கணக்கானவர்கள் வந்து கலந்துகொண்டனர். ஆண்டு விழா ஏற்பாடுகளை ஆலய அதிபர் மற்றும் பங்கு தந்தை அருளப்பா தலைமையில், குருக்கள், சகோதரிகள், பங்கு மக்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதை தொடர்ந்து, இன்று இளையோர் விழா, 31ம் தேதி நற்கருணை பெருவிழா, செப்டம்பர் 1ம் தேதி குடும்ப விழா, 2ம் தேதி தொழிலாளர் விழா, 3ம் தேதி அன்பிய பெருவிழா, 4ம் தேதி நலம் பெறும் விழா, 5ம் தேதி ஆசிரியர்கள் விழா, 6ம் தேதி பக்தசபை விழா மற்றும் 7ம் தேதி அன்னையின் ஆடம்பர தேர்பவனி திருவிழா பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடக்கிறது. 8ம் தேதி அன்னையின் முடிசூட்டு விழாவை தொடர்ந்து அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியுடன் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இந்த விழாவையொட்டி தினந்தோறும் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
போக்குவரத்து மாற்றம்
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வரும் 8ம் தேதி தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலைப் பொறுத்து, தேவைபட்டால், போக்குவரத்து மாற்றம் பின்வரும் தேதிகளில் நாளை மற்றும் செப்டம்பர் 1, 7, 8 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படும். அன்றைய நாட்களில் மட்டும், திரு.வி.க. பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யூ சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக எல்.பி.சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டும். 7வது அவென்யூ மற்றும் எம்.ஜி. சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடாது.
எம்.எல். பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், எல்.பி. சாலை இடதுபக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக வலது பக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலையில் இடதுபக்கம் திரும்பி எம்.ஜி. சாலை வழியாக இடதுபக்கம் திரும்பி பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம்.
பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் பெசன்ட் நகர் 1வது அவென்யூ, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக திருப்பிவிடப்பட்டு, பின்னர் இடது புறம் சாஸ்திரி நகர் 1வது மெயின் ரோடு வழியாக சென்று, பின்னர் வலதுபுறம் திரும்பி எம்.ஜி.சாலை வழியாக எல்.பி.சாலையை அடையலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாரை சாரையாக குவிந்த பக்தர்கள்
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று விழாவில் பங்கேற்பதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பெசன்ட் நகர் மாதா ஆலயத்தை நோக்கி திரளாக வந்தனர். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை முன்னிட்டு, சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் ஏராளமான தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.