Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரெட் அலர்ட் எதிரொலியாக ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றம்

சென்னை, நவ.29: ரெட் அலர்ட் எதிரொலியாக சென்னை குடிநீர் ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னையை நோக்கி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்வதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வட தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அதிகளவில் மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு குடிநீர் வழக்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய 3 ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் வெள்ளம் ஏற்படும் போது அதனை கட்டுப்படுத்த முகத்துவாரங்களில் தூர்வாரி தயாரி நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதவாது: கடந்த ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையில் எதிர்பாராத விதமாக அதிக மழை பெய்ததால், நகர்புறங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. இதுபோன்ற கால கட்டங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படும் வகையில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டால் நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் திறக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களின் நேற்று முன்தினம் முதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியிலிருந்து 600 கனஅடி, பூண்டியிலிருந்து 1500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியில் நேற்றைய நிலவரம் படி 2813 மில்லியன் கனஅடி, அதேபோல் பூண்டி நீர் தேக்கத்தில் 2791 மில்லியன் கனஅடி என இரண்டு ஏரியிலும் மொத்தம் 85 சதவீதத்திற்கும் அதிகளவில் நீர் இருப்பு உள்ளது. இன்றும், நாளையும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த நீர்தேங்கங்களில் 80 சதவீதம் கொள்ளளவு இருக்கும் வகையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தற்போது வரை 600 மில்லியன் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியிருந்து மொத்த கொள்ளவான 3645 மி.கனஅடியில் தற்போது 3080 மி.கனஅடி நீர் உள்ளது. அதாவது 84 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஏரியிலிருந்தும் 80 சதவீதம் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, சோழவரம் ஆகிய 5 நீர்தேக்கங்களின் மொத்த கொள்ளவான 13.21 டிஎம்சியில் தற்போது 10.60 டிஎம்சி நீர் (80%) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 5,435 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது.

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அதிக மழை பொழிவு ஏற்படும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் முகத்துவாரங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு தயாராக உள்ளன. இதன் நீர்வழித்தடங்களில் தண்ணீர் தடையில்லாமல் செல்வதற்கு புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்நிலைகளில் சேறு, கழிவு, திடக்கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இதனால், கனமழையில் நதிகள் தண்ணீரை வேகமாக கொண்டு செல்லும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகளை ஏரிகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகள், முகத்துவாரங்களில் 24 மணி நேரம் கண்காணிப்பு, நீர்தேக்கங்களின் நேரடி நிலவர கண்காணிப்பு உள்ளிட்டவை நீர்வளத்துறை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.