சென்னை, நவ.29: தந்தையை தாக்கிய நபரை அடித்து கொன்ற மகன்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி காமராஜர் நகர், தேவி நகர் பகுதியைச் சேர்ந்த முத்து (53), அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சவாரி முடித்து, ஆட்டோ ஸ்டாண்டுக்கு திரும்பியுள்ளார். அங்கு, சாலையோரத்தில் அதே பகுதியை சேர்ந்த னிவாசன் (51), என்பவர் போதையில் படுத்திருந்துள்ளார். முத்து, அவரை தாக்கி விரட்டியுள்ளார். வீட்டிற்கு சென்ற னிவாசன், இது குறித்து அவரது மகன்களிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த னிவாசனின் மகன்கள் ஜெபராஜ் (23), அருள் (21), ஆகிய இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் சென்று, அங்கு ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த முத்துவை, சாலையில் கிடந்த செங்கல்லால் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த முத்துவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து இறந்தார். இது தொடர்பாக ஏற்கனவே ஜெபராஜ் (23), அருள் (21) ஆகியோர், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை வழக்காக மாற்றி ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement

