சென்னை, நவ.28: காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீசும் காதலித்த நிலையில், சத்யாவின் பெற்றோர் எதிர்ப்பால் சதீசுடன் சத்யபிரியா பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2002 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அக்டோபர் 14ம் தேதி, சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி பரிந்துரைப்படி சதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு நவம்பர் 4ல் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், ஜூலையில் சதீஷ் மீதான குண்டாசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.பாரூக் முன்பு நடைபெற்றது. அப்போது, சம்பவத்தை நேரில் பார்த்த இளம்பெண் நேரில் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அவரிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் ரவிந்திரநாத் ஜெயபால் விசாரித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்கள்ளுடன் நிரூபிக்கப்பட்டதால் சதீசுக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2024 டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு ஆய்வுக்காக உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதே சமயம் சதீஷ் தரப்பிலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சதீசுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர். மேலும், 20 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு எதுவும் வழங்க கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

