Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1. தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4வது ரயில் பாதை கிழக்கு புறம் அமைகிறது: குடியிருப்புகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை

சென்னை, அக்.28: தாம்பரம் - செங்கல்பட்டு 4வது ரயில் பாதை கிழக்கு புறமாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்​பூரில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் பெரும்​பாலான ரயில்​கள் செங்​கல்பட்டு வழி​யாக செல்​கின்​றன. தினசரி 60க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும், 200க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களும் இந்த வழித்தடத்தில் இயக்​கப்​படு​கின்​றன. ஆனால், இத்​தடத்​தில் 3 பாதைகள் மட்​டுமே உள்​ளன. ரயில்வே வாரியம் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 3வது மற்றும் 4வது பாதை திட்டங்களுக்கு 2010ல் ஒப்புதல் அளித்தது. 3வது பாதை பணிகள் 2015ல் தொடங்கி, ரூ.260 கோடி செலவில் 2022ல் முடிக்கப்பட்டன.

ஆனால், வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையிலான சாலை ஓவர்பிரிட்ஜ் தூண்களுக்கு மிக அருகில் பாதை அமைந்திருந்ததால், இயக்கம் தாமதமானது. பலமுறை ஆய்வுக்குப் பிறகு, அந்த பகுதி இப்போது இயக்கத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த தாம்பரம் - செங்கல்பட்டு பகுதி, சென்னை கடற்கரை - விழுப்புரம் முக்கிய ரயில் பாதையின் ஒரு பகுதியாகும். இதில் தற்போது 3 பாதைகள் வழியாக புறநகர், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் இயங்குவதால், பெரும் நெரிசல் மற்றும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, 4வது புதிய ரயில் பாதை அமைக்​கும் திட்​டத்​துக்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே அமைச்​சகத்​திடம் தெற்கு ரயில்வே வழங்​கியது. ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் 4வது பாதை திட்டத்துக்கு ரூ.757.18 கோடியில் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்பகுதி தற்போது 87 சதவீதம் திறன் பயன்படுத்தலில் உள்ளது. திட்டம் நிறைவு பெற்ற பின் இது 136 சதவீதமாக உயரும் என திர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் பாதை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததும் மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏனெனில் மேற்கு புறத்தில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 30.2 கிலோ மீட்டர் 4வது ரயில் பாதை, முந்தைய திட்டப்படி மேற்குப் புறமாக அல்லாமல், கிழக்கு புறமாக (ஜிஎஸ்டி சாலையை ஒட்டி) அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்தல் சிக்கல்கள், பாலத்தின் தூண்கள் காரணமான இடையூறுகள் மற்றும் பிற தள கட்டுப்பாடுகள், குடியிருப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கிழக்கு புறத்தில் சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சில இடங்களில் கூடுதல் நிலங்கள் இன்னும் கையகப்படுத்தப்பட வேண்டும். மேற்கு புறமாக பாதை அமைக்க முயன்றால் பல முக்கிய தடைகள் / நெரிசல் பகுதிகள் உருவாகும். என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையின் மேற்குப் புறத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடியிருப்போர் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், ஜிஎஸ்டி சாலையின் அகலம் பாதிக்கப்படாது. புதிய பாதை ரயில்வேக்கு சொந்தமான நிலப்பரப்புக்குள் அமைக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்துள்ளது.