Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடசென்னை பகுதிகளில் குளம், கால்வாய் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

சென்னை, அக்.28: தண்டையார்பேட்டை மண்டலம் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் வியாசர்பாடி கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து வியாசர்பாடி பகுதி கேப்டன் காட்டன் கால்வாயில் ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் பொக்லைன் மற்றும் மிதக்கும் பொக்லைன் இயந்திரம் கொண்டு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை டான்பாஸ்கோ பள்ளி அருகில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி பகுதி கொடுங்கையூர் கால்வாயில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மணலி சாலையில் உள்ள லிங்க் கால்வாய் பாலம் பகுதியில் மிதக்கும் பொக்லைன் இயந்திரம் மூலமாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தண்டையார்பேட்டை மண்டலம் குட்செட் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான 9.64 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், ஏற்கனவே 2.51 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்திருந்தது. இதில் அதிக அளவில் மழை நீரை சேமிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில், மீதமிருந்த 7.13 ஏக்கர் பரப்பளவையும் சேர்த்து மொத்தமாக 9.64 ஏக்கர் பரப்பளவிற்கு குளத்தை அகலப்படுத்தி, ஆழப்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த குளத்தில் அதிக அளவு நீர் சேமிக்கப்பட்டு குளத்தினை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர்த் தேக்கம் ஏற்படுவது வெகுவாக குறையும். இந்த குளத்தின் உபரி நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும். இந்த குட்செட் குளம் அகலப்படுத்தி, ஆழப்படுத்திடும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூர்வாரும் பணிகளை தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.