அமெட் பல்கலைக்கழகத்தில் கப்பல் இயக்க மாதிரி மையம்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்தார்
சென்னை, செப்.27: செங்கல்பட்டு மாவட்டம், தென்பட்டினத்தில் உள்ள அமெட் அறிவு பூங்காவில் இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் கப்பல் இயக்க மாதிரி மையத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் நேற்று திறந்து வைத்தார். விழாவில் கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜகநாதன், ஏ.பி.மொல்லர் மெர்ஸ்க் நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கடல்சார் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
அமெட் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் ஏ.பி.மோலர்-மெர்ஸ்க் இடையேயான புரிந்துணர்வின் மூலம் இந்த அதிநவீன வசதி கொண்ட கப்பல் இயக்க மாதிரி மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் ரூ13.5 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது. கடல்சார் கல்வி பையிலும் மாணவர்களுக்கு கண்காணிப்பு மற்றும் திசை அறிதல், விபத்து தவிர்ப்பு, கடலில் சரியான வழி தடத்தில் செலுத்தல், ஒளி அடையாளம் காணுதல் மற்றும் பழுதுபட்ட இயந்திரம் சரிசெய்தல் உள்ளிட்ட முக்கியமான கடல்சார் கல்வியை, முழுமையாக நேரடி பயிற்சியை இந்த ஆய்வகம் மூலம் மாணவர்களுக்கு வழங்க முடியும்.
அமெட் பல்கலை தலைவர் ராஜேஷ் ராமசந்திரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேசியதாவது: 2047ல் கப்பல் கட்டுமானத் துறையில் உலகின் 5 முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். உலக அளவில் கப்பல் போக்குவரத்துக்கான மனித சக்தியை இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் 1.25 லட்சமாக இருந்த மாலுமிகளின் எண்ணிக்கை தற்போது 3 லட்சமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் மாலுமிகளை வழங்குகின்ற முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
தேசிய கப்பல் கட்டுமான இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் கப்பல் கட்டுமானம், கப்பல் பழுது நீக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், ‘‘தேசிய நீர்வழிப் பாதையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 796 கிமீ தூரம் கொண்ட காக்கிநாடா மரக்காணம் இடையே பக்கிங்காம் கால்வாயில் சரக்குப் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி சங்கர், மெர்ஸ்க் நிறுவனத்தின் கடல்சார் மக்கள் மற்றும் கலாச்சாரத் துறையின் மூத்த இயக்குநர் நைனி நார்மல் ஷூவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 2196 மாணவர்களுக்கு பட்டம், பிஎச்டி பட்டங்களும் வழங்கப்பட்டன. சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.