Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜி ஸ்கொயர், கிரேஸ் அறக்கட்டளை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிராக நடமாடும் குறும்பட பிரசாரம்

சென்னை, செப்.27: ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் கிரேஸ் அறக்கட்டளை இணைந்து, மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘ஷார்ட் பிலிம்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற நடமாடும் குறும்பட பிரசாரத்தை தொடங்கியுள்ளது. ஜி ஸ்கொயரின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, விருது பெற்ற குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ வாகனங்கள் சென்னை முழுவதும் வலம்வர இருக்கின்றன. சென்னை முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்முயற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

திறமையான இளம் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட சிந்தனையைத் தூண்டும் குறும்படங்கள், சென்னையின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட இருக்கின்றன. இத்திரையிடல்கள் மூலம் மக்களிடையே மது மற்றும் போதைப் பொருட்களின் பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்த உரையாடல்களை ஊக்குவிப்பதே முக்கிய நோக்கமாகும். சென்னையில் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் திரையிடல்கள் நடைபெறவுள்ளன. இதன் மூலம் கணிசமான எண்ணிக்கையிலான மக்களிடையே மது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை நடமாடும் குறும்பட பிரசாரம் உருவாக்கும்.

இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பால ராமஜெயம் கூறுகையில், “ சமூக நலனை அடிப்படையாக கொண்ட இந்த உன்னதமான பணியில், கிரேஸ் பவுண்டேஷனை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும் சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும், நேர்மறையான வாழ்க்கை முறை தேர்வுகளை பின்பற்ற, இந்த குறும்படங்கள் புதிய உத்வேகத்தைக் கொடுக்குமென நம்புகிறோம்,’’ என்றார்.

கிரேஸ் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் கூறுகையில், “மது மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் சமூகத்தில் தங்களுக்கான அடையாளத்தை இழக்கும் ஒவ்வொருவருக்கும் மறுவாழ்வு என்பது மிக மிக அவசியம். இம்முயற்சியின் மூலம், மது மற்றும் போதைப் பொருட்கள் பழக்கமுள்ளவர்களின் மனநிலையை மாற்றக்கூடிய, நீண்டகால தாக்கத்தை உருவாக்கக்கூடிய உரையாடல்களை முன்னெடுப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.