அம்பத்தூர், அக்.26: அம்பத்தூரில் தெருநாய் கடித்து குதறியதில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் ஒரகடம் கோவிந்தராஜ் தெருவைச் சேர்ந்த சிறுமி தண்மதி மற்றும் சிறுவன் கவிஷ் ஆகியோர் நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென தண்மதி மற்றும் கவிஷ் ஆகியோரை விரட்டி சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தண்மதி, கவிஷ் உடனே வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அதற்குள் தெருநாய் இருவரையும் கடித்துக் குதறியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தெருநாயை விரட்டி அடித்து, இருவரையும் மீட்டனர்.
பின்னர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகளையும் விரட்டிக் கடிக்கிறது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அதேபோல், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திகொண்டு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கவும், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்கவும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
