Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எளிய கற்றல் கையேடு: மேயர் பிரியா வழங்கினார்

சென்னை, நவ.25: சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு “எளிய கற்றல் கையேட்டினை” மேயர் பிரியா வழங்கினார். மேயர் 2025-26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் அதிக தேர்ச்சி விகிதம் பெற ஏதுவாக பாடங்களை எளிதான முறையில் தயார்செய்து, வினா/விடை தொகுப்பு முறையில் “எளிய கற்றல் கையேடு” வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், மேயர் பிரியா, ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெறவும், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும் ஏதுவாக “எளிய கற்றல் கையேட்டினை” மாணவ, மாணவியர் மற்றும் தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.

இவ்வினா/விடை தொகுப்பானது 2024-25ம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி சதவிகிதத்தை அளித்த ஆசியர்களைக் கொண்டு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலவழிக் கல்வியில் பயிலும் 7,183 மாணவ, மாணவியருக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கும், 12ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலவழிக் கல்வியில் பயிலும் 5,310 மாணவ, மாணவியருக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வணிகவியல், கணக்கியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய 10 பாடப்பிரிவுகளுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சென்னை பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியரும் நல்ல மதிப்பெண்கள் பெறுவதுடன், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவ, மாணவியர் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும் வாய்ப்பாக அமையும். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், இணை ஆணையாளர் (கல்வி) கற்பகம், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி, கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.