அண்ணாநகர், செப்.25: ஓவியங்களால் ெஜாலிக்கும் அங்கன்வாடியால் பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி ெதரிவித்துள்ளனர். கோடம்பாக்கம் 10வது மண்டலம், 136வது வார்டு கே.கே.நகர் பப்ளி ராஜா சாலையில் உள்ள அங்கன்வாடியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் ஓவியங்கள் வரைவதற்காக 15 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கன்வாடி சுவர்களில் தொடர்வண்டி போல அச்சு அசலான ஓவியம் வரையப்பட்டுள்ளது. அத்துடன் சோட்டா பீம், டோரா புஜ்ஜி ஆகிய கார்ட்டூன்கள் கண்களை கவரும் விதமாக வரையப்பட்டுள்ளன.
இதை கோடம்பாக்கம் 10வது மண்டல நிலைய அலுவலர் முருகேசன், செயற்பொறியாளர் இனியன், உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஓவியங்கள் பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ‘இது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் குழந்தைகளை கவரும் வகையில் ஓவியங்கள் அற்புதமாக தீட்டப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கார்ட்டூன் ஓவியங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாணவர்களுக்கு கற்றலின் இனிமை, மகிழ்வான மனநிலையை தரும் நோக்கில் அங்கன்வாடி சுவர்களில் புதுமை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும்’’ என்றனர்.