தாம்பரம், செப்.24: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி குரோம்பேட்டை, தாம்பரம் சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குரோம்பேட்டை சிஎல்சி ஒர்க்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் பாதுகாப்போடு, மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக அகற்றினர். இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதேபோல தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். அப்போது கடையின் வெளியே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் கடை உரிமையாளர்கள் இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளருமான தாம்பரம் எம்.யாகூப்பிடம் முறையிட்டனர். அவர், இதை கண்டித்து தாம்பரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சாலையோர வியாபாரிகள் 30க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தாம்பரம் காவல் நிலைய போலீசார் அவர்களை சமாதானம் செய்து பொருட்களை திரும்பத் தருவதாக உறுதியளித்து அவர்களை அங்கிருந்து கலையை செய்தனர். இதனால் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.