தொடர் மழையால் காய்கறிகள் வரத்து தாமதம் கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று மடங்கு விலை உயர்வு: பூக்கள் விலை சரிந்தது
அண்ணாநகர், அக்.23: தொடர் மழையால் அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து தாமதாகி வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை மூன்று மடங்கு உயர்ந்து விற்பனை யானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சில்லாரை வியாபாரிகள் வராததால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்தனர். சென்னையின் பல இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து தாமதமாகிறது.
இதனால், காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து, அனைத்து காய்கறிகளின் விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை ஒரு கிலோ அளவில்: வெங்காயம் ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.50, தக்காளி ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.30, கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.90, பீட்ரூட், சவ்சவ் ரூ.30, முள்ளங்கி ரூ.28, அவரைக்காய் ரூ.50, பீரக்கன் ரூ.30, எலுமிச்சை ரூ.90, நூக்கல் ரூ.25, கோவைக்காய் ரூ.30, கொத்தவரை ரூ.25 என விலை உயர்ந்து விற்பனையானது. இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், மழை காரணமாக வெளி மாநிலத்தில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை மூன்று மடங்கு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வராததால் வியாபாரம் மந்தகதியில் நடந்ததாக தெரிவித்தார்.
அதேபோல், கோயம் பேடு பூ மார்க்கெட்டில் வழக்கமாக பூக்கள் வாங்க வரும் பொதுமக்கள், சில்லரை வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்ததால் அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்தது. இதனால், கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனை செய்ய வந்த விவசாயிகளும், அவற்றை வாங்கி விற்பனை செய்த வியாபாரிகளும் உரிய விலை கிடைக்காமல் கவலை அடைந்தனர்.
ஒருகிலோ அளவில் பூக்களின் விலை நிலவரம்: மல்லி ரூ.900லிருந்து ரூ.400க்கும், ரூ.600க்கு விற்ற ஐஸ் மல்லி ரூ.300க்கும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.400லிருந்து ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.300லிருந்து ரூ.200க்கும், சாமந்தி ரூ.140லிருந்து ரூ.100க்கும், சம்பங்கி ரூ.80லிருந்து ரூ.20க்கும், பன்னீர் ரோஸ் ரூ.60க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும் விற்பனையானது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘கனமழை பெய்து வருவதால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பூக்களின் வரத்து குறைந்தது’. அதே போல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை குறைந்ததால் வியாபாரம் இல்லாமல் அனைத்து பூக்களையும் கூவிக் கூவி விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வேதனை அடைந்ததாக தெரிவித்தார்.