வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 215 நிவாரண முகாம்களில் 1,47,000 பேருக்கு உணவு: களப்பணியில் 24,149 பேர்
சென்னை, அக்.23: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கடந்த 19ம்தேதி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டு, கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
சென்னையில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார். அதன்படி, சென்னை மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்பு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 68 உணவு தயாரிப்பு கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெருநகர மாநகராட்சி வாயிலாக இந்த உணவு மையங்களில் இருந்து நேற்று காலை 1 லட்சத்து 46 ஆயிரத்து 950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடம் இருந்து 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீர்வாரியம் மூலம் 2149 களப்பணியாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.