Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டையில் ரூ.77.76 கோடியில் 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை, செப்.23: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை வாழைத் தோப்பு திட்டப்பகுதியில் ரூ.77.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை வாழைத் தோப்பு திட்டப்பகுதியில் ரூ.77.76 கோடியில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். அப்போது, ஒரு பயனாளியின் வீட்டை திறந்து வைத்து, அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 ஆயிரம் வீடுகளை, இந்த வாரியம் மூலமாக முதல்வர் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமில்ல, 18லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் வழங்கி இருக்கிறார். இன்றைக்கு கொடுக்கப்படுகின்ற இந்த ஒவ்வொரு வீடும், கிட்டத்தட்ட 300 சதுர அடி இருந்த வீடு, தற்போது 410 சதுர அடியாக உயர்த்தப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. நிறைய மகளிர் வந்து இருக்கின்றீர்கள், அதனால், ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும். கலைஞர், சமத்துவபுரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அங்கு இருக்கக்கூடிய வீடுகளை, அந்த வீடுகளில் தங்கி இருக்கக்கூடிய அந்த மகளிருடைய பெயர்களிலேயே பதிவு செய்து கொடுத்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் போட்ட முதல் கையெழுத்து திட்டமான விடியல் பயணத்திட்டத்தின் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் மட்டும் 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். அடுத்து இன்னொரு முக்கியமான திட்டம், அதுதான் முதல்வருடைய காலை உணவுத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 21 லட்சம் குழந்தைகள் இன்றைக்கு தரமான காலை உணவை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசுப்பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் படித்தாலும், அது தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,000 மாணவி என்றால் புதுமைப்பெண், மாணவன் என்றால் தமிழ்புதல்வன் திட்டம் என்று வழங்கி கொண்டிருக்கின்றார். இதன் மூலம் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

அடுத்து மிக, மிக முக்கியமான திட்டம், ஒட்டுமொத்த இந்தியாவையே முதல்வரை திரும்பி பார்க்க வைத்த திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கிட்டத்தட்ட இந்த திட்டம் ஆரம்பித்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கிட்டத்தட்ட ரூ.24 ஆயிரம் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயாக, கிட்டத்தட்ட ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு முதல்வர் வழங்கி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கணபதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் இணை மேலாண்மை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், நொளம்பூர் ராஜன், மாமன்ற உறுப்பினர் தரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

n புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

n முதல்வருடைய காலை உணவுத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 21 லட்சம் குழந்தைகள் இன்றைக்கு தரமான காலை உணவை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

n விடியல் பயணத்திட்டத்தின் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் மட்டும் 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

n கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.24 ஆயிரம் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயாக, ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு முதல்வர் வழங்கி இருக்கிறார்.