வேளச்சேரி, செப்.23: சென்னை தி.நகர் - கிளாம்பாக்கம் செல்லும் சென்னை மாநகர பேருந்து (தடம் எண் வி51இ) நேற்று காலை 7 மணி அளவில் வேளச்சேரி மெயின் சாலை வழியாக கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தண்டீஸ்வரம் கோயில் அருகே திருப்பத்தில் சென்ற போது எதிரே வந்த வேளச்சேரி- கொளத்தூர் செல்லும் மாநகர பேருந்து (தடம் எம்51வி) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேருந்துகளின் முன் பகுதிகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் வி51இ பேருந்து டிரைவர் மடிப்பாகத்தை சேர்ந்த அன்பழகன் (44) மற்றும் பேருந்தில் சென்ற பயணிகள் வேளச்சேரி, ஓரண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த நிறை பாண்டியன் (27), கோவிலம்பாக்கம், திருவேங்கடம் நகர், 2வது தெருவை சேர்ந்த தினகரன் (30), சந்தோஷபுரம், விக்னராஜபுரம் ஒன்றாவது மெயின் ரோடை சேர்ந்த விமலா (62), நன்மங்கலம் பார்த்தசாரதி கோயில் தெருவை சேர்ந்த அமல சசிகலா (50) உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறர்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பேருந்துகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். பின்னர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சாலை குறுகலாக இருப்பதால் பேருந்து திரும்பும்போது பிரேக் பிடிக்காததால் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
+
Advertisement