புழல், செப்.22: மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து காவல் பலியானார். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். மாதவரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (50), மாதவரம் போக்குவரத்து பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து புழலில் இருந்து மாதவரத்தில் உள்ள தனது வீட்டுக்கு பைக்கில் திரும்பியுள்ளார்.
மாதவரம் ரெட்டேரி அருகே வந்தபோது, செங்குன்றத்திலிருந்து துறைமுகம் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ரவிக்குமார் மீது லாரி உரசியதில் வலது கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு சதை தொங்கியது. ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த அவரை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவரான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷா (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.