திருவொற்றியூர், ஆக.22: மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்கவும், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்வதை தடுக்கவும் ஒன்றிய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.8.90 கோடியில் மணலி காமராஜர் சாலையில் உள்ள மணலி மாத்தூர் ஏரி, மாதவரம் ஏரி ஆகியவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன், ஏரிக்கரையில் பொதுமக்களுக்கு நடைபாதை, ஜியோ செல் பிளாக் மேட் சாய்வு தளம் அமைத்து வெட்டி வேர் நடும் பணி நடைபெற்று வருகின்றன. இதேபோல், ரூ.2.16 கோடியில் மாத்தூர் கொசப்பூர் ஏரி, ரூ.2.44 கோடியில் ஆமுல்லைவாயல் ஏரி ஆகியவையும் தூர்வாரி சீரமைத்து, சாய்வு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அம்ரூத் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி அவனிஷ் சர்மா தலைமையில் மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் தர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, ஏரியின் தன்மை, மழைநீரை சேமிக்கும் முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திட்ட பயன்பாடு ஆகியவை குறித்து கேட்டறிந்தனர். பருவமழை நெருங்குவதால் ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
+
Advertisement