சென்னை, நவ.19: சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், வேளச்சேரியில் உள்ள ஊட்டி காய்கறி மற்றும் பழக்கடையின் பங்குதாரராக உள்ளார். இந்த கடையின் கட்டிடத்திற்கு கடந்த 2009 டிசம்பர் முதல் 2011 பிப்ரவரி வரையிலான காலத்தில், கூடுதல் மின் கட்டணமாக 8 லட்சத்து 4,979 ரூபாய் செலுத்த வேண்டும் என மின்வாரிய தணிக்கையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, செந்தில்குமாருக்கு வேளச்சேரி மின்வாரிய அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற செந்தில்குமார், அங்குள்ள கணக்கு பிரிவு மேற்பார்வையாளர் சேதுராமனை சந்தித்து, இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, சேதுராமன், இந்த தொகையை ரூ.1.5 லட்சமாக குறைப்பதற்கு ரூ.2.5 லட்சம் தரவேண்டும், என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து செந்தில்குமார் சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ரூ.50,000 லஞ்ச பணத்தை கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி, செந்தில்குமார் கொடுத்த போது அதை பெற்ற சேதுராமனை, போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ஜெகநாதன், மின்வாரிய அலுவலர் சேதுராமன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்தால், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


