சென்னை, செப்.19: தேசிய அளவிலான அலைச்சறுக்கு விளையாட்டு போட்டிகள், கோவளத்தில் நேற்று தொடங்கியது. இதில், இந்திய அளவில் 8 மாநிலங்களை சேர்ந்த 93 அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சம்மேளனம் ஆகியவை சார்பில் அலைச்சறுக்கு போட்டிகள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரையில் நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் மாலதி ஹெலன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்க தலைவர் சித்தார்த் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் இந்திய அளவில் 8 மாநிலங்களை சேர்ந்த 93 அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆண்கள், பெண்கள், பொது, ஜூனியர் என 4 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடக்கின்றன. நேற்று முதல் சுற்று போட்டி நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற அனைவரும் இன்று முதல் நடைபெறும் பல்வேறு சுற்று போட்டிகளில் பங்கேற்பர். இறுதிப்போட்டி வருகிற 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு கோப்பை வழங்கப்படுகிறது. தொடக்க விழாவில் சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.