சென்னை, செப்.19: சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ரயில்வே, சென்னை ரயில்வே கோட்டத்தில், சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, நவீன வசதிகள் கொண்ட சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தல், சரக்குகளை கையாளுவதற்கு ஏற்ற ரயில் நிலையத்தை அமைத்தல், வணிக மேம்பாட்டு குழு அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதை தொடர்ந்து, சரக்கு ரயில் போக்குவரத்து வேகமாக வளர தொடங்கியது. தற்போது, சென்னையில் இருந்து நாட்டின் பல நகரங்களுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக, புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி சாதனை படைக்கப்பட்டது. மான்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார ஆட்டோக்கள், சரக்கு ரயிலில் ஏற்றி ஆந்திர மாநிலம் தடா ரயில் நிலையத்திலிருந்து, மேற்குவங்கம் மாநிலம் ரங்கபாணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: மின்சார வாகனங்களை பெரிய அளவில் ரயில் மூலம் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளை இது உருவாக்குகிறது. ஒவ்வொரு சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலமும் ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும். நடப்பு நிதியாண்டில் 8 சரக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.1.50 கோடி ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை வழி போக்குவரத்துடன் ஒப்பிடும் போது, ரயில் மூலம் மின்சார வாகனங்களைக் கொண்டு செல்வதால், கரியமில வாயு வெளியேற்றத்தை கணிசமாக குறைக்கிறது. இதன்மூலம், ரயில்வே நாட்டின் பசுமைப் போக்குவரத்து சேவையாக தனது பங்கை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.