தண்டையார்பேட்டை, நவ.18: புரசைவாக்கம் அடுத்த தாசபிரகாஷ் பூந்தமல்லி நெடுஞ்சாலையை சேர்ந்தவர் ஹரிஷ் (34). இவர், பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி ஹரிஷின் பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த கார்த்திக் பேரா, பாப்பன் ராய், நாராயணன் மைட்டி உள்பட 4 பேர் பட்டறையில் இருந்த 1 கிலோ 781 கிராம் தங்கத்தை திருடி சென்றுவிட்டதாக கொருக்குப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் உதவி ஆணையாளர் மகேந்திரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், நகையை திருடிய குற்றவாளிகள் சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் பதுங்கி இருப்பதாக செல்போன் சிக்னலை வைத்து மேற்கு வங்கத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த கார்த்திக் பேரா, பாப்பன் ராய், நாராயணன் மைட்டி மற்றும் சந்தேகத்தின் பேரில் கார்த்திக் பேராவின் உறவினர் ஒருவர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement


