சென்னை, அக்.18: தூய்மை பணியாளர்களின் சேவை மிகவும் போற்றத்தக்கது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய 1,100 தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பிரியா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, எழும்பூர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்ட தந்தை பெரியாரின் திடலில், தூய்மைப் பணியாளர்களை சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றமைக்கு பெருமையாக கருதுகிறேன். தூய்மைப் பணியாளர்களான உங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. அதுவும் குறிப்பாக மழைக் காலங்களில், கொரோனா காலங்களில் உங்களின் உழைப்பு யாராலும் அளவிட முடியாதது. களத்தில் எங்கள் எல்லோருக்கும் முன், எங்களுக்கு தைரியம் சொல்லி களத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கதான்.
தலைநகர் சென்னையை தூய்மையாக பராமரிக்கும் பெருமை வாய்ந்த இந்த தூய்மைப் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்த பெருமையை நான் தேடிக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, பரந்தாமன் வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் தமிழன் பிரசன்னா, டாக்டர் யாழினி, பரிதி இளம்சுருதி, பகுதி செயலாளர்கள் வேலு, சுதாகர், சரிதா மகேஷ் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வானவில் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.