சென்னை, அக்.18: மும்பையில் இருந்து நேற்று பகல் 11 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் 11 மணிக்கு வந்தது. ஆனால், சென்னையிலிருந்து மதுரைக்கு பகல் 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் தாமதமானது. இதையடுத்து சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மதுரை செல்ல வேண்டிய சுமார் 140 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பிற்பகல் 1.45 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் மதுரை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதுபோல, நேற்று பகல் 12.55 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானமும் சுமார் 2 மணி நேரம் தாமதமாக மாலை 3.45 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மதுரை செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயணம் செய்ய சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சென்னை விமான நிலையத்தில் தவித்தார். இதற்கிடையே பிற்பகல் 1.45 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு செல்லும் என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து என்று அறிவிக்கப்பட்டு, அதில் பயணிக்க இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 140 பயணிகளும், மாற்று விமானம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.