பல்லாவரம், ஆக.18: பல்லாவரத்தில் இருந்து பம்மல் சங்கர் நகர், காமராஜபுரம் வழியாக திருநீர்மலை செல்லும் சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், சமீப காலமாக இரவு நேரங்களில் அதிகளவில் எருமை மாடுகள், கும்பல் கும்பலாக சாலையில் படுத்துக் கிடக்கின்றன.
இதனால், இவ்வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இதே நிலையில் தான் பயணிக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்ற உயிர்காக்கும் வாகனங்கள் இந்த மாடுகள் மோதி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
ஏற்கனவே பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே, சாலையில் படுத்து கிடக்கும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.