Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.14,000 கோடியில் புதிய திட்டம்: நீர்வளத்துறை தகவல்

சென்னை, செப்.17: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.14,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்டுவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை, மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த 6 ஏரிகளிலும் மொத்தம் 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி நீா் சேமித்து வைக்கலாம். இதுதவிர தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகள் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள தெலுங்கு கங்கா திட்டத்தில், கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் பெறப்படுகிறது. மேலும், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப, குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிகிறது. 2050ம் ஆண்டுக்குள் சென்னைக்கு இப்போது இருப்பதை விட 3 மடங்கு குடிநீர் தேவைப்படும். இதற்காக நீர் வளத்துறை ஒரு பெரிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஏரிகள், குளங்களை சரி செய்யவும், புதிய நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்தவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் ரூ.14,000 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சென்னையின் தண்ணீர் தேவையை சமாளிக்க உதவும்.

நீர்வளத்துறை தயார் செய்துள்ள ஒரு அறிக்கையில், சென்னையின் குடிநீர் தேவை இப்போதுள்ள 11 டிஎம்சியில் இருந்து 38.73 டிஎம்சியாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய 1,165 திட்டங்களை நீர்வளத்துறை முன்வைத்துள்ளது. அதில் முக்கியமான 704 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். இந்த திட்டங்கள் சென்னை மற்றும் பாலாறு உட்பட 12 பகுதிகளில் செயல்படுத்தப்படும். குறிப்பாக 350 ஏரிகளை சரி செய்ய கவனம் செலுத்தப்படும். ஸ்ரீபெரும்புதூர், திருநின்றவூர், மணிமங்கலம், பிள்ளைப்பாக்கம் போன்ற செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரங்களும் இதில் அடங்கும்.

ராஜிவ்காந்தி சாலையில் உள்ள 64 ஏரிகளான நாராயணபுரம், தாழம்பூர், செம்மஞ்சேரி, நன்மங்கலம் போன்றவையும் சீரமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஏரிகளை சிறிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக மாற்றினால், ஒவ்வொரு ஏரியிலும் 0.25 டிஎம்சி முதல் 0.5 டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும். நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள 1,150 ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, கழிவுநீர் கலக்காமல் தடுக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் அந்தந்த பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். முக்கிய நீர்த்தேக்கங்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

புதிய திட்டத்தில் ஏற்கனவே உள்ள 5 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிக்க திட்டம் இல்லை. ஆனால், மாற்று வழிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. கூவம், அடையாறு, பாலாறு ஆகிய 3 ஆறுகளின் மேல் பகுதிகளில் 12 நீர்த்தேக்கங்கள் கட்டப்படும். திருவேற்காடு, பூந்தமல்லி கூவம் ஆற்றிலும், பாலாற்றின் கரையோரம் உள்ள 4 கிராமங்களிலும் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நீர்த்தேக்கமும் 0.5 டிஎம்சி முதல் 1 டிஎம்சி வரை தண்ணீரை சேமிக்க உதவும். செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் சென்னைக்கே கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ், நீர்வளத்துறை 3 புதிய நீர்த்தேக்கங்களை கட்ட உள்ளது. ஒன்று கிழக்கு கடற்கரை சாலை சாலையில் உள்ள உப்பு ஏரியிலும், மற்றொன்று பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ் செம்மொழி நிறுவனத்திற்கு அருகில் உள்ள 300 ஏக்கர் நிலத்திலும் கட்டப்படும். பெரும்பாக்கம் நீர்த்தேக்கத்தில் 1.7 டிஎம்சி முதல் 2.25 டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 2 டிஎம்சி வரை சேமிக்க முடியும். இதனால் பள்ளிக்கரணையில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும். ராஜிவ்காந்தி சாலை பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.

நீர்வளத்துறை, ஆறுகளின் கரையோரங்களில் 402 நிலத்தடி நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நன்னீர் நிலத்தடியில் சேமிக்கப்படும். கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகையில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் 500 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குழாய்கள் அமைக்கப்பட்டதும், முக்கிய நீர்த்தேக்கங்களின் சுமை குறையும். இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம் போன்ற தொழில் பகுதிகளில் உள்ள 200 ஏரிகள் சீரமைக்கப்படும்.

இதனால் தொழிற்சாலைகள் தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் 115 மில்லியன் லிட்டர் தண்ணீர் மிச்சமாகும். மேலும், அடையாறு ஆற்றில் இருந்து பாலாற்றுக்கு தண்ணீர் திருப்பி விடப்படும். கொசஸ்தலை ஆற்றில் இருந்து கூவம் ஆற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்தை நீர் வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர். இந்த திட்டங்கள் எல்லாம் சரியாக நடந்தால், சென்னை மக்கள் தண்ணீர் கஷ்டம் இல்லாமல் வாழலாம்,’ என்றார். கூவம், அடையாறு, பாலாறு ஆகிய 3 ஆறுகளின் மேல் பகுதிகளில் 12 நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும்.

4,100 ஏரிகள்

சென்னைக்கு ஒவ்வொரு ஆண்டும் போதுமான மழை கிடைக்கிறது. சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார 4 மாவட்டங்களில் 4,100 ஏரிகள் உள்ளன. தண்ணீரை சேமிக்க வேறு எங்கும் போக தேவையில்லை. வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். நிலத்தடி நீர் சேகரிப்பை கட்டாயமாக்கினால், வெளியிலிருந்து தண்ணீர் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.