சென்னை, செப்.16: எண்ணூர், வஉசி நகரை சேர்ந்த தேவபிச்சை என்பவரின் மகன் ஜான்சன் (37) என்பவரை, முன்விரோத தகராறில் அத்திப்பட்டு பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு 4 பேர் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. இந்த வழக்கு தொடர்பாக ராஜி, சீனிவாசன், ரஹ்மான், உலகநாதன் ஆகிய 4 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதில் அத்திப்பட்டு, புதுநகரை சேர்ந்த திருப்பதி ராவ் என்பவரின் மகன் சீனிவாசன் வழக்கு விசாரணைக்காக, நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவானார்.
இதுகுறித்து, உதவி ஆணையர் ராஜா ராபர்ட் மேற்பார்வையில், மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலுமணி தலைமையில் உதவி ஆய்வாளர் பழனிவேல், காவலர்கள் சந்தோஷ்குமார், வேல்முருகன், மோகன் முரளி ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார், நீண்ட காலமாக தலைமறைவான சீனிவாசனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவான கொலை குற்றவாளி சீனிவாசன் ஆந்திராவின் கொத்தகோடா பகுதியில் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சீனிவாசனை கைது செய்து, மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். தொடர்ந்து, சீனிவாசனிடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.