சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பல மடங்கு கட்டணம் வசூலிப்பு: வாடகை கார் ஓட்டுநர்கள் அடாவடி
மீனம்பாக்கம், செப்.16: சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில், நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் சுமார் 30,000 பயணிகள் வருகை பயணிகள். இவர்களில் பெரும்பாலானோர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்வதற்கு வாடகை கார்களை பயன்படுத்துகின்றனர். இவர்களிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதாக சமீப காலமாக அதிக அளவில் புகார்கள் வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளாக வருபவர்களிடம் வாடகை கார் டிரைவர்கள் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
அதோடு, தமிழ்நாட்டின் பல்வேறு வெளி மாவட்ட பயணிகளிடமும், இதைபோல் கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து வாடகை கார்கள் புறப்படும்போது, ஒரு கட்டணம் பேசிவிட்டு, இறங்கும் இடங்களில் கூடுதலாக கட்டணம் கேட்டு பயணிகளை நிர்பந்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதில், அதிகமாக பாதிக்கப்படுவது உள்நாட்டு பயணிகளை விட, வெளிநாட்டு பயணிகள் தான் அதிகம்.
அவர்கள் வேறு வழியின்றி, வாடகை கார் ஓட்டுநர்கள் கேட்கும் அதிக கட்டணத்தை கொடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் இருந்து ஒரு பயணி, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி, மறைமலைநகர் செல்வதற்கு தனியார் வாடகை காரில், கூடுதலாக ரூ.300 கட்டணம் வற்புறுத்தி வாங்கியதாக, அந்தப் பயணி சமூக வலைதளம் மூலமாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், பயணியிடம் வருத்தம் தெரிவித்ததோடு, உடனடி நடவடிக்கை எடுத்து, அந்த தனியார் கால் டாக்சி நிறுவனத்துக்கு தெரியப்படுத்தி, கூடுதல் கட்டணம் வசூலித்த டிரைவரை, சென்னை விமான நிலைய சவாரி வருவதற்கு, ஒரு மாத காலம் தடை விதித்த சம்பவமும் நடந்துள்ளது.
இதைபோல் பல பயணிகள் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. இதனால், சென்னை விமான நிலையத்தில், பயணிகளிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, பயணிகள் தரப்பில் கூறுகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இதைபோல் பயணிகளிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக, 1989ம் ஆண்டு, இந்திய விமான நிலைய ஆணையமும், தமிழ்நாடு அரசும் இணைந்து, ஒரு திட்டத்தை ஏற்படுத்தினர். அதன்படி, சென்னை விமான நிலையத்தில், வாடகை கார்கள் ஓட்டும் உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து, ப்ரீபெய்ட் டாக்ஸி டிரைவர்கள் யூனியன் ஒன்றை உருவாக்கினார்கள். அதன் மூலம் அரசு நிர்ணயித்த நியாயமான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதோடு, வசூலிக்கும் கட்டணத்துக்கு முறையான ரசீதும் கொடுக்க வேண்டும்.
பயணிகளின் உடைமைகள், பெண் பயணிகளின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த, ப்ரீபெய்ட் டாக்ஸிகள் இயக்கங்களை, மாநில அரசு கண்காணிக்கும்.
சென்னை விமான நிலையத்தில் இந்த ப்ரீபெய்ட் டாக்ஸி யூனியனில், தற்போது 300க்கும் மேற்பட்ட டாக்ஸிகள் உள்ளன. இது தவிர சென்னை விமான நிலைய அங்கீகாரம் பெற்ற கேப்ஸ், தனியார் கால் டாக்ஸி போன்றவைகளும் உள்ளன. ஆனால், இதைபோல் முறையான அங்கீகாரம் எதுவும் இல்லாத சில கார்கள், அதில் வாடகைக்கு பயன்படுத்தக்கூடாத சொந்த பயன்பாடு கார்களும், சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில், சர்வதேச முனைய வருகை பகுதிக்குள், விதிமுறைகளுக்கு மாறாக நுழைந்து, பயணிகளிடம் டாக்ஸி என்று கூறி ஏமாற்றி, குறைந்த கட்டணம் என்று பயணிகளை ஏற்றிச்சென்று,
இறங்கும் இடங்களில் அதிக கட்டணங்கள் கேட்டு நிர்பந்தம் செய்வதோடு, பயணிகளை மிரட்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தடுப்பதற்கு சென்னை விமான நிலையத்தின் வருகை பகுதியில், இரவு அதிகாலை நேரங்களில் கூடுதலாக, காவலர்களை நிறுத்தி, சட்ட விரோதமாக உள்ளே நுழையும் கார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு, பயணிகளும் முறையான அங்கீகாரம் உள்ள வாடகை கார்களில் பயணம் செய்யும்படி அறிவுறுத்தப்பட வேண்டும் என்று அங்கீகாரம் பெற்ற டாக்ஸிகளின் டிரைவர்கள் கூறுகின்றனர்.
விதிமீறினால் நடவடிக்கை
சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை விமான நிலையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, புகார் வந்தால் அதை விசாரித்து, அந்தந்த நிறுவனங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதைபோல் முறையான அங்கீகாரம் இல்லாத கார்கள் உள்ளே வந்து, பயணிகளை ஏற்றுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நிறைவடைந்ததும், ஏற்கனவே இருந்தது போல், வருகை பகுதியின் உள்பகுதியில், டாக்ஸி புக்கிங் கவுன்டர் அமைக்கப்படும்,’’ என்றார்.
புக்கிங் கவுன்டர் தேவை
சென்னை விமான நிலைய வருகை பயணிகள் கூறுகையில், ‘‘சர்வதேச விமான நிலையத்தின் வருகை உள்பகுதியில், கடந்த 2023ம் ஆண்டு வரையில், ப்ரீபெய்ட் டாக்ஸி புக்கிங் கவுன்டர் இருந்தது. அப்போது நாங்கள் சுங்க சோதனை முடிந்ததும், டாக்ஸி கவுன்டரில் பணம் கட்டி, ரசீதை வாங்கிக்கொண்டு, வெளியில் வந்து பயணம் மேற்கொள்வோம். ஆனால், தற்போது விமான நிலையம் உள்ளே, ப்ரீபெய்ட் டாக்ஸி கவுன்டர் இல்லை. இதனால், நாங்கள் வெளியில் வந்து தான், டாக்ஸி புக் செய்ய வேண்டியுள்ளது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அங்கீகாரம் இல்லாத கார்கள் உள்ளே வந்து, எங்களை ஏற்றி சென்று, இதை போல் கூடுதல் கட்டணம் கேட்கும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, இதைத் தவிர்க்க, ஏற்கனவே இருந்தது போல், சர்வதேச முன்னையத்தின் வருகை பகுதியில், டாக்ஸி புக்கிங் கவுன்டரை, மீண்டும் அமைக்க வேண்டும்,’ என்றனர்.