சென்னை: ராயப்பேட்டையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது நஸ்ரூதின். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் திருவல்லிக்கேணி மார்கெட் சென்ற போது, அங்கிருந்த ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் ஒன்று இவரை கடித்திருக்கிறது.
இதனையடுத்து அவர் ரேபிஸ் தடுப்பூசியை போட்டிருக்கிறார். ஆனால், உடல் நலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.
அதேபோல், ராயப்பேட்டை நாயர் வரத பிள்ளை தெருவை சேர்ந்தவர் லட்சுமி (65), அதே பகுதியில் வசித்து வரும் தனது மகள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனி என்பவரின் வளர்ப்பு நாய் மூதாட்டி லட்சுமியின் வலது காலில் கடித்துள்ளது. இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.