Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை: மக்கள் கூட்டம் அலைமோதியது

சென்னை, அக்.14: தமிழக அரசு உதவியுடன் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு உதவியுடன் சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் விற்பனையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் 11ம் ஆண்டாக பட்டாசு கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கடைகள் மூலமாக பலனடைவார்கள். இதன் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும். தீபாவளி முடிந்த ஓரிரு நாட்களில் இந்த பட்டாசு வியாபாரம் நிறைவு பெறும். இந்த பட்டாசு வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் உரிய பாதுகாப்பும் அடிப்படை தேவைகளான கழிப்படை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டாசு கடைகள் முன்கூட்டியே அமைப்பதற்கும் பட்டாசு கடைகளில் வியாபாரத்தை இன்றைக்கு தொடங்குவதற்கு அரசு பெரும் உதவியாக இருந்ததை வியாபார பெருமக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். 30 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு வியாபாரிகள் மேலும் கூடுதலாக கடைகள் அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தால் கூட அதற்கு அரசு ஏற்பாடுகள் செய்ய தயங்காது. ஒரு வாரம் காலம் முதலாகவே இங்கு கடைகள் அமைக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் நடத்தப்பட்டது. இது முதலாளிகள் தொழிலாளிகள் சார்ந்த வியாபாரம் என்ற காரணத்தினால் அனைத்து தரப்பினரும் பலன் பெறும் வகையில் ஏற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டாசு கடைகளில், சிவகாசி விருதுநகர் போன்ற மாவட்டங்களை சார்ந்த உயர்தர பட்டாசுகள் மட்டுமே விற்கப்படுகிறது. பட்டாசு வியாபாரிகள் இந்த மாவட்டத்தில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்து தொழிலாளிகள் போக்குவரத்து ஆகிய செலவினங்களை கணக்கில் வைத்து அதில் சிறிதளவு லாபம் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகள் வாங்க குவிந்தனர்.