புழல், செப்.14: பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதால், புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் அண்மை காலமாக பூண்டி ஏரியில் இருந்து வரப்பட்ட நீர்வரத்து காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி முழு கொள்ளளவு எட்டும் நிலைக்கு வந்தது. கனமழையும் கொட்டி தீர்த்ததால் பாதுகாப்பு கருதி புழல் ஏரிக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, மழை குறைந்து தற்போது மீண்டும் புழல் ஏரி நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில், பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் 200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 105 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 205 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,946 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 19.67 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 180 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 172 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு காரணமாக 20 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 18.86 அடி உயரத்தில் தற்போது 4.31 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.