மாதவரம், நவ.13: மாதவரம் அருகே ஆட்டோவில் வந்த பயணியிடம் 6 சவரன் நகை பறித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மாதவரத்தை சேர்ந்தவர் அஜித் நாயர்(33). வட பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று நிறுவனத்திற்கு செல்ல இவரும் அதே நிறுவனத்தில் பணி புரியும் 20 வயது பெண்ணும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றனர். மாதவரம் சின்ன ரவுண்டானா வி.எஸ்.மணி நகர் அருகே சென்றபோது ஆட்டோவை மறைவிடத்திற்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநர், கத்தியை காட்டி மிரட்டி அஜித் நாயர் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்க செயினை கேட்டுள்ளார். அவர் தர முடியாது என மறுக்கவே, அவருடன் வந்த இளம் பெண்ணை கட்டிபிடித்து கொண்டு நகையை கழற்றி கொடு என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த இளம்பெண் அலறிக் கூச்சலிட்டார்.
இதைக்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவர அஜித்நாயர் கழுத்திலிருந்த 6 கிராம் தங்க செயினை ஆட்டோ ஓட்டுநர் பறித்துக் கொண்டு ஆட்டோவுடன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அஜித்நாயர் கொடுத்த புகாரின்பேரில் மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், செயின் பறிப்பில் ஈடுபட்ட மாதவரத்தை சேர்ந்த பிரசாத்(எ) பல்லு பிரசாத்(24) என்பவரை கைது செய்தனர். மேலும், 6 சவரன் செயினை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுதி புழல் சிறையில் அடைத்தனர்.
